தலச்சிறப்பு |
ஊர் பெயர் சாத்தமங்கை, கோயிலின் பெயர் அயவந்தி. முடிகொண்டான் ஆற்றுக்கு இருபுறமும் இவ்வூர் உள்ளது.
மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்', 'அயவந்தீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'இருமலர்க்கண்ணம்மை' என்னும் திருநாமத்துடன் சுமார் 5 அடி உயர அளவில் தரிசனம் தருகின்றாள். அம்மன் சன்னதி தனியாக உள்ளது. இக்கோயிலில் சுவாமியும் அம்பாளும் மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர்.
கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, ஸ்ரீகௌரி லீலை, அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிச்சாண்டவர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
பிரகாரத்தில் மகாலிங்கம், மகாகணபதி, அனுமன், குழந்தை கிருஷ்ணன், நால்வர், திருநீலநக்க நாயனார், அவரது மனைவி மங்கையர்க்கரசி, வள்ளி, தேவசேனை சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரங்கள், சூரியன், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
திருநீலநக்க நாயனார் வழிபட்டு முக்தி பெற்ற தலம். அவர் பிறந்த ஊர் அருகில் உள்ளது. ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று விழா சிறப்பாக நடைபெறுகிறது.
பிரம்மா வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|